கோவில்களை திறக்க ஆலோசனை: அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2021 02:06
பெங்களூரு-ஊரடங்கால் கோவில் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஜூன் 21 முதல் கோவில்களை திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அமைச்சர் சீனிவாஸ் பூஜாரி அறிவித்துஉள்ளார்.கொரோனாவால் ஏப்ரலில் ஊரடங்கு போடப்பட்டது முதல் கோவில்கள், மசூதி தேவாலயங்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை.ஊரடங்கினால் கோவில்களின் வருமானம் மட்டுமின்றி, அர்ச்சர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: கோவில் அர்ச்சகர்களுக்கு, 3,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இது அவர்களுக்கு சிறிய அளவிலான உதவி மட்டும் தான்.அறக்கட்டளை மற்றும் தனியார் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கோவில்களில் உள்ள அர்ச்சர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு ஊரடங்கின் போது ஆன் லைன் மூலமாக பூஜை நடத்துவது, பிரசாதம் வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் பொருளாதார நிலை ஓரளவு தடுமாற்றமில்லாமல் இருந்தது.நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு மோசமாக இருந்ததால், அதற்கும் வழியில்லை.அதிக வருவாய் பெறும் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவில், குக்கே சுப்ரமணிய சுவாமி கோவில், கொல்லுார் மூகாம்பிகா உட்பட பல கோவில்களின் வருமானமும் பாதிக்கப்பட்டது.குறிப்பாக கோடை விடுமுறையின்போது ஊரடங்கு போடப்பட்டதால் இழப்பு மேலும் அதிகரித்தது. வரும் 21 முதல், கோவில்களை திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அறநிலைத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாஸ் பூஜாரி கூறியதாவது:கோவில்களை மீண்டும் திறப்பதில் அவசரப்பட முடியாது. தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.