சித்தூர் : சித்தூர் மாவட்ட சிவன் கோயிலில் இன்று(21ம் தேதி) முதல் தரிசன நேரங்களை நீட்டிப்பதாக ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார். அவர் விடுத்த அறிக்கையில் ஆந்திர மாநில அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இருந்து வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் 21.06.21 முதல் மாநிலம் முழுவதும் சில தளர்வுகளை விடுத்ததை அடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோயிலில் பக்தர்களுக்கு தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்ய முடிவெடுத்துள்ளதாக நிர்வாக அதிகாரி தெரியப்படுத்தினார் .
இனி வரும் நாட்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் என்றார் .இதேபோல் இச்சமயங்களில் கோயிலில் நடக்கும் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் வழக்கம் போல் ஈடுபடலாம் என்றும் ஆனால் கோயிலில் நடக்கும் மற்ற ஆர்ஜித சேவைகள் அனைத்தும் கோயில் சார்பில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியின்றி நடத்தப்படும் என்றும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா தொற்று விதிமுறைகளின்படி முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரியப்படுத்தினார்.