பதிவு செய்த நாள்
28
ஜூன்
2021
08:06
சென்னை : சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் திறக்கப்பட்டது. பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் பழனி ஆண்டவரை தரிசித்து மகிழ்ந்தனர்.
வடபழநி ஆண்டவர் கோவிலில், இன்று (ஜூன் 28) முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பிற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்., மாதம் முதல், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி, தினசரி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் கோவில்களில், அரசு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, சென்னையின் பிரசித்தி பெற்ற வடபழநி ஆண்டவர் கோவிலில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகள், தெற்கு கோபுர நுழைவாயில் முழுவதும் துாய்மைப் படுத்தப்பட்டது. அதேபோல, கோவிலின் உட்பிரஹாரத்திலும் கிருமிநாசினி கலந்த தண்ணீரால் சுத்தப்பட்டுள்ளது. நுழைவாயிலில் பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின், கிருமி நாசினி அளித்து கைகளை சுத்தப்படுத்திய பின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். கோவில் ஊழியர்கள் அனைவருக்கும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து கோவிலுக்கு வரும் பக்தர்களை, வண்ண வண்ண கோலங்கள் போட்டு வரவேற்க கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கோவில் நுழைவாயில், பக்தர்கள் பாதங்களை கிருமிநாசினி கலந்த நீரால் சுத்தப்படுத்த, தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சன்னிதானத்திற்கு செல்ல, இருபுறமும் கட்டை கட்டி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின், விபூதி பிரசாதம், உதிரிப்பூ வழங்கப்படும். பின், கோவிலில் இருந்து வெளியேறும் பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல் பிரசாதம் வழங்கப்படும்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவிக் கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.