கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே காரையூரில் மரம் பூத்ததற்கு சிறப்பு வழிபாடு , அன்னதானம் செய்து இயற்கையை வழிபட்டனர். நகரமயமாக்கல் என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் அது சிலர்தான். இன்றளவும் மக்கள் மரங்களை வழிபட்டு பாதுகாக்கின்றனர். சாதாரணமாக வேப்ப மரங்களில் மஞ்சள் வஸ்திரம் கட்டி, குங்குமம் வைத்து வழிபடுவதை பார்க்கலாம்.
அதற்கும் ஒருபடி மேலாக ஒரு மரம் பூத்ததற்கு சிறப்பு வழிபாடு நடத்தி படையலிட்டு அன்னதானம் செய்து கிராம மக்கள் மகிழ்ந்துள்ளனர். திருப்புத்தூர் ஒன்றியம் காரையூரில் மு. கேசவன் என்பவரின் தோட்டத்தில் கூந்தல் பனை மரம் உள்ளது. கடந்த ஆண்டு இது பூத்துள்ளது. தற்போது அதன் விதைகள் பரவலாக சிதறி வருகிறது. அரச மரத்துடன் பின்னி வளர்ந்துள்ள கூந்தல் பனை மரத்தை தெய்வமாகவே வழிபட்டுள்ளார். இந்நிலையில் 60 ஆண்டுக்கு ஒரு முறை பூப்பதால் மரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்த கிராமத்தினருடன் முடிவு செய்தார். கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. தற்போது கொரோனா அலை ஓய்ந்த நிலையில் காரையூர், புதுவளவு கிராமத்தினர் குடும்பத்துடன் தோட்டத்திற்கு வந்து நேற்று காலை மரத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அங்கேயே சைவ விருந்துணவு தயார் செய்து அன்னதானமிட்டனர். இதன் மூலம் அப்பகுதியில் பசுமை வளம் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.