பதிவு செய்த நாள்
01
ஜூலை
2021
02:07
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கடைகளை இணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலகப்புகழ் பெற்ற கோயில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலும் ஒன்று. இந்தக்கோயிலுக்கு சொந்தமான கடைகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி, சன்னதி தெரு, பார்க்வியூ பஜார், காந்தி மண்டபம் பஜார், தேரோடும் ரத வீதிகள் போன்ற இடங்களில் உள்ளன.
இந்த கடைகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் தனியாருக்கு வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன . இந்த கடைகளை குமரி மாவட்ட திருக் கோயில்களின் இணை ஆணையர் செல்வராஜ் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலின் வெளிசுற்றுப்பிரகார பகுதிகளில் புதிதாக கடைகள் கட்டுவதற்கான இடங்களையும் இணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது நாகர்கோவில் இந்து ச மய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆறுமுக நயினார், குமரி மாவட்ட திருக் கோயில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் அய்யப்பன், குமரி மாவட்ட திருக்கோயில்களின் தலைமை அலுவலகசட்ட பிரிவு மேலாளர் சிவகுமார், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பொருளாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.