பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
12:07
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 38 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் இன்று(5ம் தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மேமாதம் 10ம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி தினசரி பூஜைகள் மட்டும் நடந்தது.
இதில் குறைவான போத்திகள், சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் வந்து சென்றனர். கடற்கரை, நாழிகிணறு, முடிகாணிக்கை ஆகியவைகளுக்கு அனுமதி வழங்கபடாமல் இருந்தது. தமிழகஅரசு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தது. இதில் வழிப்பாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோயிலில் 55 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த கோயில் உதவி ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: தமிழக அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கோயில் நடைதிறக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைபக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கடல் மற்றும் நாழி கிணற்றில் புனித நீராட அனுமதியில்லை. பக்தர்கள் நேரடியாகதரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கோயில் வளாகத்தில் சுத்தப்படுத்தும் பணி நேற்று நடந்தது . கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பிரகாரம், கோயில் உட்பிரகாரம் ஆகியவைசுத்தம் செய்யப்பட்டது.