நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கேந்திராவில் அன்னபூஜை நடைபெற்றது. விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை 4-ல் மகா சமாதி அடைந்தார்.
நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக ஏக்நாத் அரங்கத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு அன்ன பூஜை நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட அரிசியை குவித்து வைத்து அதன் மேல் அன்னபூரணி சிலையை ஆவாகனம் செய்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது. மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி, மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ரானடே ஆகியோரின் உருவப்படங்களும் வைக்கப்பட்டிருந்தது.கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர இணை பொதுச் செயலாளர் ரேகா தவே குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். தேசிய பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத் தலைவர் நிவேதிதா, ஆயுட்கால தொண்டர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினார்கள். இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.