பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
10:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் இறைவனை மனமுருக வேண்டினர்.
கோவிட் தொற்று, இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால், தமிழகம் முழுவதும் கோவில்கள் அடைக்கப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் நுழைந்து, அன்றாடம் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வந்தனர். தொற்று ஓரளவு குறைந்து வருவதால், நேற்று முதல் தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களில் நுழைய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், வீரபாண்டி லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆதி மூர்த்தி பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும், குடியிருப்புகளில் உள்ள சிறிய அளவிலான விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவில்களில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்த பின் அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் நுழைவதற்கு முன்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, கோயிலுக்குள் பக்தர்கள் நுழைந்தனர். பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு, இறைவனை வழிபட்ட பக்தர்கள், நிம்மதி பெருமூச்சுடன் சென்றனர்.