அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தில் தலையில்லாத அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டதாக வரலாற்று மைய ஆர்வலர்கள் ஸ்ரீதர் , செல்வம் கூறினர்.
அவர்கள் கூறியதாவது: இடைகால பாண்டியர்களின் சிலையான இதன் காலம் கி.பி., 960 முதல் 1230 வரை ஆகும். இச்சிலை வழிபாட்டில் இருந்த நிலையில் நளாடைவில் தலை சிதைந்து விட்டது.இருப்பினும் பீடத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் உள்ளார். விரிந்த மார்பில் அணிகலன்கள், முப்புரி நுால் உள்ளது. புஜங்களில் உருளை வடிவ தோள் வளைகளும், முன்னங்கையில் கை வளைகளும் உள்ளன. வலது கரத்தில் செண்டாயுதம் உள்ளது. இடது கரத்தை இடது காலின் மேல் வைத்தப்படி இருக்கிறார். மேல்புஜத்தில் பாண்டியரின் சின்னமான மீன் வடிவம், இடுப்பில் யோகபட்டை காணப்படுகிறது. வலது காலை தொங்கவிட்டும் இடது காலை மடக்கியும் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். சிலை வைத்து பார்க்கும் போது இங்கு பெரிய கோயில் இருந்திருக்கலாம். அகழாய்வு செய்தால் பல தகவல்கள் கிடைக்கும், என்றனர்.