பதிவு செய்த நாள்
07
ஜூலை
2021
04:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள காலனி, குடியிருப்புகளில் உள்ள விநாயகர், முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோவிட் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகம் முழுவதும் தளர்வுகளை, அரசு பிறப்பித்தது. நேற்றுமுன்தினம் முதல் பெரிய மற்றும் சிறிய கோவில்களில் கோவில்களுக்குள், பக்தர்கள் சென்று, இறைவனை வழிபடலாம் என, அனுமதித்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை, பெரிய கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நேற்றுமுன்தினம் மாலை குடியிருப்புகள், காலனி மற்றும் நகர்களில் உள்ள சிறிய அளவிலான விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களின் முன்பு வாழை கம்பங்கள் கட்டி, மாவிலை தோரணங்களுடன், பூஜைகள் நடந்தன. சில கோயில்களில் மாலை, 6:00 மணிக்கு பக்தி பாடல்கள் ஒலி பரப்பப்பட்டன. மாலையில் நடந்த பூஜைகளில், அந்தந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்புகளில் உள்ள கோவில்களில் அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பூஜைகள் நடக்கும். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். கடந்த இரண்டு மாதங்களாக பூஜைகள் நடக்கவில்லை. கோவில்களில் மீண்டும் பூஜைகள் நடக்கத் துவங்கியது மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது என்றனர்.