வத்திராயிருப்பு:சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால், பிரதோஷ வழிபாட்டிற்கு வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஊரடங்கு தளர்வுக்கு பின் நேற்று முதல் ஜூலை 10 வரை பிரதோஷம் ,அமாவாசை வழிப்பாட்டிற்கு சதுரகிரிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் இரவு சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால் மலைபாதை ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. இதனிடையே ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். ஓடையில் நீர் வரத்து அதிகம் இருந்ததால் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காத்திருந்த பக்தர்கள் தாணிப்பாறை கேட் முன்பு சூடம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். நேற்று மாலை சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. இன்றும் மழை பெய்தால் பக்தர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.