பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
04:07
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் கோசாலைக்கு,பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்கள், இலவசமாக பிறருக்கு வழங்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 4ம் தேதி ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில், கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ., பழனியாண்டியும், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு, பசுக்களை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, ஸ்ரீரங்கம் ரங்கராஜன்நரசிம்மன் கூறியதாவது:அறநிலையத் துறையின் எந்த விதியின் கீழ், இப்படி கோசாலைக்கு வந்த பசுக்களை இலவசமாக கொடுக்கின்றனர் என்று தெரிய வில்லை. உபரியாக உள்ள பசுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாக, அறிவிப்புப் பலகை சொல்கிறது. கோசாலையில், எத்தனை பசுக்களை வைத்துப் பராமரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரியவில்லை.
விழா நடந்த அன்று மட்டும், 45 பசுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.பல ஆண்டுகளாக, ஒவ்வொரு பெரிய கோவிலிலும் உள்ள பசுக்களை, இப்படி இலவசமாக கொடுப்பதாகத் தெரிகிறது. கடந்த 2012ல் மட்டும், திருச்செந்துார் முருகன் கோவிலில், 6,000 பசுக்கள் இப்படி கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோவிலிலும், இதே நடைமுறை இருந்து வருகிறது. இவை அனைத்தும் அடிமாடுகளாக விற்பனை செய்யப்படுமே அன்றி, பேணிப் பாதுகாக்கப்படுவதற்கான ஆதாரம் ஏது?ஸ்ரீரங்கம் விழாவில், சட்டசபை உறுப்பினரும், இணை ஆணையர் மாரிமுத்துவும் பங்கேற்று உள்ளனர்.பக்தர்கள் அன்போடும், நம்பிக்கையோடும் வழங்கும் பசுக்களை, இப்படி விலையில்லாமல் வழங்குவது எதற்காக? இதற்கான அனுமதியை, எந்த அறநிலையத் துறைச் சட்ட விதி வழங்குகிறது?இவ்வாறு ரங்கராஜன் நரசிம்மன் கூறினார். - நமது நிருபர் --