பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
12:07
நாகப்பட்டினம் : தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை வந்த முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
முதல்வராக பொறுப்பேற்ற பின், தன் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம், திருக்குவளைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். குடும்பத்தினரோடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தரிசனம் செய்தார்.
கோவிலில் இருந்து நடந்தே, கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்த அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலி மாறன், கருணாநிதி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பழமையான புகைப்பட தொகுப்புகளை பார்வையிட்டார். தன் குடும்பத்தினரின் சிறு வயது புகைப்படங்களின் தொகுப்பை, மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடம் விளக்கினார். அங்கிருந்த பதிவேட்டில், முதல்வர் பதவியை, பதவியாக கருதாமல் பொறுப்பு என கருதி, என் பயணம் தொடரும் என எழுதி கையெழுத்திட்டார்.பின், தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சீராவட்டம் பகுதியில் வெண்ணாறு வடிகால் வாய்க்காலில் நடக்கும் துார்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.