சேதுக்கரை: ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை மன்னார் வளைகுடா.கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.
முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை கடற்கரையில் வைத்து வழிபாடு செய்தனர். திருவாதிரை நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமைகளில் வரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் 12 ஆண்டுகள் திதி கொடுப்பதற்கான புண்ணியம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. கடலில் நீராடிய பின் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். அருகே உள்ள வெள்ளைப் பிள்ளையார், அகத்தியர் கோயிலிலும் தேங்காய் உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் முகக் கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சாயல்குடி அருகே மாரியூர் கடலில் புனித நீராடி திதி கொடுத்த பின்னர், பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் நடந்த பால் அபிஷேகத்தில் பங்கேற்றனர். மூக்கையூர், நரிப்பையூர் உள்ளிட்ட கடற்கரைபகுதிகளில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புனித நீராடினர்.