பதிவு செய்த நாள்
12
ஜூலை
2021
10:07
சென்னை; கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு ஏற்படுத்த வேண்டும் என, நில நிர்வாகத் துறைக்கு அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தொடர்பாக, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், நில நிர்வாகத் துறை கமிஷனருக்கு எழுதிய கடிதம்:தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, கோவில் நில ஆவணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தி இருப்பவை; பகுதியாக பொருந்தி இருப்பவை; புதிய விபரங்கள் என, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தும் ஆவண சொத்துக்கள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. பகுதியாக பொருத்தும் நிலையில் உள்ள ஆவணங்களில், கூடுதல் விபரங்கள் சேகரிக்கும் பணிகள், இறுதிக் கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், அறநிலையத் துறை உருவாக்கி உள்ள, ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை முறையான ஐ.டி.எம்.எஸ்., சாப்ட்வேரை, பத்திரப்பதிவுக்கான ஸ்டார் -- 2.0 சாப்ட்வேருடன் இணைக்க, பதிவுத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பு முடிந்தால், கோவில் நிலங்கள் தொடர்பான பத்திரங்களை தனியார் பதிய வரும்போது, சார் - பதிவாளர்கள் எளிதாக கண்டுபிடித்து தடுக்கலாம். அடுத்த கட்டமாக, வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், கோவில் நிலங்களை, டெம்பிள் என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான, டி என அடையாளப்படுத்த வேண்டும். இதனால், கோவில் நிலங்களை தனியார் பெயரில், பத்திரப்பதிவு செய்வது முழுமையாக தடுக்கப்படும்.எனவே, தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், இதற்கான குறியீட்டை சேர்க்க நில நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நில நிர்வாகத்துறை இதற்கான வழிகாட்டுதல்களை, தகவல் தொகுப்பை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையமான, என்.ஐ.சி.,க்கு அனுப்ப வேண்டும். உயர் முன்னுரிமை அடிப்படை யில், இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.