பதிவு செய்த நாள்
14
ஜூலை
2021
04:07
ஆனந்த நடனம்: சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரிய õகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.