திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் மீண்டும் அன்னதானம் துவக்கப்பட்டுள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கோயில்களில் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், கொரோனா நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரினத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள், ரயிலடி சித்தி விநாயகர், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில்கள் உட்பட அனைத்துக் கோயில்களிலும் வழக்கம் போல் மீண்டும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை பொட்டலங்களாக வழங்கி வருகின்றனர். செயல் அலுவலர்கள் கூறியதாவது: நோய் தொற்று குறைந்து வருவதால் அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அன்னதான பொட்டலங்களை வினியோகிப்பதை நிறுத்தி விட்டோம். தற்போது கோயில்களிலேயே காலை 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படுகிறது, என்றார்.