பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
11:07
மேட்டுப்பாளையம்: காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவில் நந்தவனத்தில், நட்சத்திரங்களுக்கு உகந்த மர நாற்றுகள், செடிகள் நடப்படும் என, கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தெரிவித்தார்.
காரமடை அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான, இரண்டு ஏக்கர் நில நந்தவனம், மேட்டுப்பாளையம் சாலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்பக்கத்தில் உள்ளது. நந்தவனத்தின் ஒரு பகுதியில் கோவிலின் கோசாலையில், ஒரு பசு மாடும், கன்றுக்குட்டியும் வளர்க்கப்படுகிறது. மேலும் மின்சார வசதியுடன் கிணறு உள்ளது. நந்தவனம் சரியாக பராமரிக்காததால் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த நந்தவனத்தில் பசு மாட்டிற்கு தேவையான தீவனப் பயிர்களையும், பூச்செடிகளையும் வளர்க்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காரமடை அரங்கநாதர் கோயில் செயல் அலுவலர் லோகநாதன் கூறுகையில்," கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பூஜைக்கு தேவையான அரளி, துளசி, வில்வம், நந்தியா வட்டம் உட்பட பல்வேறு பூச்செடிகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தை சுத்தம் செய்து, அதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஏற்ற மரம், செடிகளின் நாற்றுகளை நடுவதற்கு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது," என்றார்.