பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
11:07
விருத்தாசலம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும் கடைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். கடலுார் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள தேரடியில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கான தனி தேர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களாகவும், தகர ஷீட் அமைத்தும் 29 கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுமாறு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்புவதும், கடை உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்வதும் நீட்டித்தது. தேரடியில் உள்ள 29 கடைகளில், 9 கடைகளின் உரிமையாளர்கள் மேல்முறையீட்டிற்கு சென்றதால், மீதமுள்ள 20 கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.கடலுார் உதவி ஆணையர் பரணிதரன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் காலை 10:00 மணியளவில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, சன்னதி வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின், ஜேசிபி இயந்திரம் மூலமாக கட்டடங்கள் மற்றும் தகர ஷீட்டுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் மண்டபத்தில் உள்ள 14 கடைக்காரர்களும், கோர்ட்டில் தடை பெற்றுள்ளனர். தேரடியில் 9 கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்குகள் முடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என்றார்.தேரடியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அப்பகுதியில் சில்வர் கம்பிகளால் அழகுபடுத்த வேண்டும் என தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், அழகுபடுத்தும் பணியை துவங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் விரைவில் நடக்கவுள்ள நிலையில் தேரடியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.