பதிவு செய்த நாள்
20
ஜூலை
2021
10:07
சோழவரம் : தமிழக கோவில்களில் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர் மற்றும் கோதண்டராமர் கோவில்களில் ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள கோவில்கள், திருக்குளம், தேர் ஆகியவற்றை புனரமைக்கப்பட்டு பணிகள் 100 கோடி ரூபாயில் நடைபெறுகின்றன. விரைவில் மீட்கப்படும்அந்த திட்டத்தின் கீழ், வரமுக்தீஸ்வரர், கோதண்டராமர் கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் திருடி, வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சிலைகள் விரைவில் மீட்கப்படும்; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சிலை திருட்டு வழக்குகள் மீதான விசாரணையும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.ஆட்சி பொறுப்பேற்ற 70 நாட்களில், ஆக்கிரமிப்பில் இருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ளன. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.ஆய்வின் போது, அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தராசன், துரை சந்திரசேகர், சுதர்சனம் ஆகியோர் உடனிருந்தனர்.
ஊத்துக்கோட்டைசோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 2.38 கோடி ரூபாயில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளையும், அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.பின், சேகர்பாபு கூறுகையில், சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேவைபட்டால் கூடுதல் நிதி ஒதுக்கப்படும், என்றார்.