பதிவு செய்த நாள்
24
ஜூலை
2021
01:07
சென்னை-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.
உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை. யானைகளை குறுகிய இடத்தில் அடைத்து வைக்கின்றனர். கான்கிரீட் தரையில் நிற்க வைக்கின்றனர்.பெரிய அளவிலான இடங்களில் யானைகளை வைப்பது தான் வசதியாக இருக்கும். தரைப்பகுதியில் களிமண் இருக்க வேண்டும். நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதால், காலில், மூட்டுகளில் பிரச்னை ஏற்படுகிறது. யானைகளுக்கு வெவ்வேறு விதமாக, உணவு வழங்கப்பட வேண்டும். புரதம், நார்ச்சத்து கலந்த உணவு வழங்க வேண்டும். உணவு பொருள் வாங்குவதிலும் ஊழல் நடப்பதால், ஒரே மாதிரியான பசுமை உணவை மட்டுமே வழங்குகின்றனர்.எனவே, கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.