பதிவு செய்த நாள்
30
ஜூலை
2021
03:07
பூந்தமல்லி: மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் 1,008 பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டது.
பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில், பழமையான ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாத திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் கடந்த வாரம் துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருகிறார். 10 நாள் திருவிழாவில் 7-ம் நாளான நேற்று, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது.காட்டுப்பாக்கம் பொன்னியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி, மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் ஊர்வலமாக நடந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நாடு முழுதும் மழை பொழிந்து செழிப்படையவும், கொரோனா தொற்று ஒழியவும், இந்த சிறப்பு பாலாபிஷேகம் நடத்தப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.