சபரிமலை:ஆவணி மாத பூஜைகளுக்காக திட்டமிட்டுஇருந்ததை விட ஒரு நாள் முன்னதாக சபரிமலை கோவில் நடை திறக்கிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று அதிகாலை 5:55 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் ஒரு நாள் முன்னதாகவே ஆக., 15 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று, வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அதைத் தொடர்ந்து மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், அபிஷேகத்துக்குப் பின் நிறைபுத்தரிசி பூஜை நடக்கும். சபரிமலை கோவிலுக்குச் சொந்தமான வயலில் அறுவடை செய்த நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைத்து தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்துவார். ஆக., 23 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், முன்பதிவு விரைவில் துவங்கும் என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் சபரிமலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். தற்போது ஆவணி மாத பூஜைகளுடன் திருவோண பூஜையும் வருவதால் நடையானது எட்டு நாட்கள் திறக்கப்படுகிறது.