பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
11:07
மங்களூரு : ஊரடங்கு விதிமுறைகள் தளர்வால், குக்கே சுப்ரமண்யா கோவிலில், பூஜைகள், சேவைகள் நேற்று துவங்கப்பட்டது.
தட்சிண கன்னடா மங்களூரின், சுள்யாவில் அமைந்துள்ள குக்கே சுப்ரமண்யா கோவில், தென் மாநிலங்களிலேயே, பிரசித்தி பெற்ற பரிகார தலமாக விளங்குகிறது. மாநிலத்தில் கொரோனா ஊரடங்கால் கோவில்களும் மூடப்பட்டது. அர்ச்சகர்கள், ஊழியர்கள் மட்டும் பூஜை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. மாதக்கணக்கில் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஏற்பட்டது. ஊரடங்கு கெடுபிடி தளர்த்தப்பட்ட பின், கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு, அரசு அனுமதியளித்தது.
ஆனால் சிறப்பு பூஜைகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை. தற்போது ஒவ்வொரு கோவில்களில், பூஜை, புனஸ்காரங்கள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. குக்கே சுப்ரமண்யா கோவிலில், சர்ப்ப பரிகாரம், ஆஸ்லேஷா பூஜை, நாக பிரதிஷ்டை, பஞ்சாமிர்த அபிஷேக சேவைகள், நேற்று முதல் துவங்கப்பட்டது. பக்தர்கள் முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம். ஒவ்வொரு சேவைக்கும், ரசீது பெற்ற பக்தர்களில் இருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பரிகார பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள், தடுப்பூசி பெற்றிருப்பது அல்லது கொரோனா நெகடிவ் அறிக்கை வைத்திருப்பதை, கோவில் நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது.