பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
01:07
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், வழிபாடு களை கட்டியது.
ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் உள்பட மாநகரில் அனைத்து அம்மன் கோவில்களிலும், காலை அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பல கோவில்களில் பக்தர்கள், கேழ்வரகு கூழை பிரசாதமாக வழங்கினர்.
*கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
*சத்தி அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, பெண் பக்தர்கள் அதிகம் வந்தனர். நெய் தீபமேற்றி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல், புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
*அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதேபோல் அம்மாபேட்டை, அத்தாணி, ஆப்பக்கூடல் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
*பவானி அருகே, காளிங்கராயன்பாளையத்தில் மாரியம்மன், பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், ஆடி வெள்ளி வழிபாடு அமோகமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றால், முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே, கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
- நிருபர்கள் குழு -