பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
05:07
தஞ்சாவூர், கும்பகோணம் மகாமக குளத்தில் நீராட பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கண்ணன் மாவட்ட நிர்வாகத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு, கடந்த ஜூன் மாதம் மீண்டும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழிபட திறந்துவிடப்பட்டுள்ளது. கோவில்களில் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் புனித தீர்த்தமாக கருதப்படும் கும்பகோணம் மகாமக குளம் கொரோனா காலத்தில் முழுவதுமாக பூட்டப்பட்டுள்ளது. இதுவரை திறக்கப்படவில்லை. கும்பகோணத்துக்கு கோவில்களை தரிசனம் செய்ய வரும் வெளியூர் பொதுமக்கள் மகாமக குளத்தில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். குளத்தின் நான்கு கரைகளிலும் பூட்டப்பட்டுள்ளதை திறந்து விட்டால், பொதுமக்கள் புனித நீரட முடியும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.