உலக சாதனை புத்தகத்தில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ஓவியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2021 11:08
மதுரை : மதுரையின் ஆன்மிக பெருமையான மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் ஓவியமாக வரைந்து உயர் தத்ரூப ஓவியம் (ஹைப்பர் ரியாலிடிக்ஸ் டிராயிங்) பிரிவில் இந்தியாஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல்புக் ஆப் ரிக்கார்ட்ஸ் ஆகிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துஉள்ளார் கீழ்மதுரை ஸ்டேஷன் பகுதி ஓவியக் கலைஞர் வெண்ணிலா 23.அவர் கூறியதாவது:பி.எஸ்.சி., கம்ப்யூட்டர், பேஷன் டிசைனிங் படித்துஉள்ளேன். ஓவியம் மீதான ஆர்வத்தால் சுயமாக கற்றுக் கொண்டேன். மதுரையின் பெருமை, பாரம்பரியம், ஆன்மிகத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதனால் தான் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை ஓவியமாக தீட்டினேன். மூன்று மாதங்கள், 350 மணி நேரம் உழைத்து வண்ணம் தீட்டி, தத்ரூபமாக ஓவியத்தை கொண்டு வந்தேன். கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் அம்மனின் முகத்தில் செம்பு வண்ணம் கொண்டு வர 20 வகையான கலர் பென்சில்களை பயன்படுத்தினேன். அம்மனுக்கு பின் கல்யாண நிகழ்வுகளையும் வரைந்துஉள்ளேன். இதையெல்லாம் ஆவணங்களாக்கி இந்தியாஸ், இன்டர்நேஷனல் உலக சாதனை புத்தகங்களுக்கு அனுப்பினேன். அவர்கள் மீனாட்சி ஓவியத்தை ஹைப்பர் ரியாலிஸ்டிக் டிராயிங் பிரிவில் தேர்வு செய்து பாராட்டு சான்றிதழ், பதக்கம், விருது அனுப்பினர். அடுத்தது மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களை வரைய திட்டமிட்டுள்ளேன், என்றார். இவரை வாழ்த்த 99427 10037.