பதிவு செய்த நாள்
03
ஆக
2021
09:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் இன்றி ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. தெப்பத் திருவிழாவை, ஆன்லைனில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 10:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுவஸ்திரம், மூலவர், உற்சவர் மற்றும் சண்முகப் பெருமானுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
தெப்பம்: மாலை 5:00 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் காவடி மண்டபம் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக குளத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். கொரோனா தொற்று காரணமாக, இரண்டாவது ஆண்டாக நடந்த ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழாவும், பக்தர்களின்றி நடந்தது. மேலும் காவடிகளுடன் வந்த சில பக்தர்கள், மேல்திருத்தணி நல்லாங்குளம் அருகே உள்ள மலைப்படி மற்றும் சன்னிதி தெருவில் உள்ள மலைப்படி ஆகிய இடங்களில் காவடிகள் வைத்து பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நேரடி ஒளிபரப்பு: நாளை வரை நடைபெறும் தெப்பத் திருவிழா
https://youtube.com/channel/CO0LVzA0i9lqDAPKywqLI2w என்ற முகவரியில், யுடியூப் வாயிலாக மாலை 5:00 மணி முதல் தெப்பத்திருவிழா முடியும் வரை நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மலைக்கோவில் மற்றும் திருக்குளம் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்லாத வண்ணம், திருத்தணி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆடிக்கிருத்திகை விழா மற்றும் தெப்பத் திருவிழாவையொட்டி, மலைக்கோவில் மற்றும் திருக்குளம் ஆகிய பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு கவனிப்பு: திருத்தணி முருகன் கோவிலில், நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில், விதிமீறி கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர், சென்னையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரை, மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். மலர் காவடிகளுடன் தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து, மூலவர் சன்னிதிக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொழிலதிபருக்கு ரகசிய சிறப்பு தரிசனம் செய்து வைத்தது, பக்தர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.