பதிவு செய்த நாள்
06
ஆக
2021
10:08
சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம், முதல் கட்டமாக, 47 பிரசித்தி பெற்ற கோவில்களில் துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில், தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது.
வேங்கட சுப்பிரமணியம், கபாலி மற்றும் பாலாஜி குருக்கள் தமிழில் அர்ச்சனை செய்தனர்.முன்னதாக, கோவில் வளாகத்தில், தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்களின் பெயர்கள், மொபைல் போன் எண்கள் அடங்கிய பெயர் பலகையை அமைச்சர் திறந்து வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது: தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த, விளம்பர பலகையை கோவிலில் திறந்து வைத்துள்ளோம். மூன்று அர்ச்சகர்கள், அவர்களின் மொபைல் போன் எண்கள் பலகையில் இருக்கும். தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் மட்டும், அந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். அனைவரும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லைஅனைத்து கோவில்களிலும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு போற்றி புத்தகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில், முதலவர் வெளியிடுவார். இந்தவார இறுதிக்குள், 47 பிரசித்தி பெற்ற கோவில்களில், தமிழில் அர்ச்சனை திட்டம் துவக்கப்படும்.அடுத்ததாக, மாநிலம் முழுதும் உள்ள, 539 பிரதான கோவில்களில் தமிழில் அர்ச்சனை அமலாகும். அர்ச்சகர்களுக்கும் போதுமான பயிற்சி வழங்கப்படும். கும்பாபிஷேகத்தை, தமிழில் நடத்துவதற்கு என, ஒரு குழு அமைக்கப்படும். இருப்பினும், கோவில் உள்ள பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்ப, தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.பழைய நடைமுறைகளுக்கு களங்கம் ஏற்படாமல், முன்னோர் வழியில் கடைப்பிடித்து, சண்டை சச்சரவுகளுக்கு இடமின்றி கோவில் திருப்பணி, கும்பாபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படும். கோவில்களில் ஆடைகள் கட்டுப்பாடுகள் உள்ளன. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணைக் கமிஷனர் காவேரி செய்திருந்தார்.