பதிவு செய்த நாள்
06
ஆக
2021
09:08
சென்னை : கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து, இந்திய மருத்துவு கவுன்சில் உடன் இணைந்து முடிவு செய்யப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, தங்கசாலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பைராகி மடம் வெங்கடேச பெருமாள் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் போன்றவற்றின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து, அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது என, கல்வெட்டுக்கள் வாயிலாக அறியப்படுகிறது. அந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, கோவில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கோவிலுக்குள் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பொறித்து வைத்துள்ளனர். எனவே, இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும்.
கோவில்களுக்கு சொந்த மான இடங்களை, விதிகளை மீறி பலர் பட்டா மாறுதல் செய்துள்ளனர். அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, கோவில் இடம் மீட்கப்படும். கொரோனா தொற்று பரவல் உள்ள சூழலில், ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து, மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.இந்த ஆய்வின் போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.