தடுப்பூசி போட்டால் தான் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2021 08:08
சிம்லா: தடுப்பூசி போட்ட சான்றை காட்டினால் தான் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இமாசல் பிரதேச அரசு அதிரடி முடிவை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 3 வது அலை எந்த அளவுக்கு வரும் , எந்த அளவுக்கு பாதிப்பை தரும் என்ற அச்சம் நிலவிக்கொண்டிருக்கிறது. மேலும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் வரும் ஆக.,9 முதல் சர்வன் அஷ்டமி நவராத்ரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இத்திருவிழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக பங்கேற்பர். கோவிட் நேரத்தில் பக்தர்கள் கூடுவது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி மாநிலத்திற்குள் நுழையும் நபர்கள் கோவிட் நெகடிவ் சான்றை காண்பிக்க வேண்டும். மேலும் உள்ளூர் மக்களும், வெளி மாநில மக்களும் 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். கோயிலுக்குள் நுழைவதற்கு கோவிட் நெகடிவ் சான்றை காட்டினால் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.