ஆடி அமாவாசையில் பக்தர்களின்றி வெறிச்சோடியது சதுரகிரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2021 10:08
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வனப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்புடன் நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வருவதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்நிலையில் மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் வரலாம் என்பதால் தாணிப்பாறையை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நேற்று முன்தினம் முதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை மிகக் குறைந்த அளவில் கோவிலுக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களை போலீசார் அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் மனவேதனையுடன் திரும்பினர். அதனையும் மீறி வந்த சில பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாசலில் சூடம் ஏற்றி சதுரகிரியை நோக்கி வணங்கி சென்றனர். சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. முருகன், வனத்துறை, அறநிலையத்துறை உயரதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வனத்துறையினர் மட்டும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்து பாரம்பரிய முறைப்படி அமாவாசை வழிபாடு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். எப்போதுமே ஆடி அமாவாசைக்கு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்லும் நிலையில், நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் சதுரகிரி மலைப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.