பதிவு செய்த நாள்
09
ஆக
2021
10:08
பல்லடம்: மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, கோவில்கள் பூட்டப்பட்டுவது குறித்து, காமாட்சிபுரி ஆதீனம் கவலை தெரிவித்துள்ளார். பல்லடம் அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமம் நடந்தது.
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஹோமத்தின் நிறைவாக பேசியதாவது: நாம் அனைவரும் மற்றவர்களிடம் நல்லவர்களாக இருக்க நினைக்கிறோம். ஆனால், கடவுளிடம் மட்டும் அவ்வாறு இருக்க நினைப்பதில்லை. நாம் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தே தீரும். இந்தத் தலைமுறையில் செய்யும் தவறு ஏழு ஜென்மங்களுக்கும் தொடரும். தர்மம் செய்வதே திதி என்று சொல்லப்படுகிறது. உணவு, உடை என, எந்த வகையிலும் தர்மம் செய்யலாம். ஆண்கள் தர்மசீலர் என்றும், பெண்கள் தர்மபத்தினி என்றும் கூறப்படுவர். தர்மத்தின் வழியிலிருந்து அனைவரும் தவறியதால், கொரோனா எனும் நோய் மூலம் அச்சப்பட்டு வருகிறோம். மதுக்கடைகள் திறக்கப்பட்டு, கோவில்கள் மூடப்படுகின்றன. உலகில் நான்கு தர்மங்களும் அழிந்துவிட்டன. ஆண் பெண்ணாகவும்; பெண் ஆணாகவும் தெரியும் வகையில், அரைகுறை ஆடைகள் அணிகின்றனர். நாகரீகம் எனும் பெயரில், நமது நாட்டின் பாரம்பரியத்தை மறந்ததாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்கள் பூலோகத்துக்கு வந்து செல்வதாக ஐதீகம். அந்நாளில், கடவுளையும், முன்னோர்களையும் வழிபட்டு தர்மம் செய்வது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை தொடர்ந்து, கலச தீர்த்தங்களால் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.