பதிவு செய்த நாள்
10
ஆக
2021
07:08
சென்னை: மாங்காடு காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் பஸ் நிறுத்தம், பயணியர் நிழற்குடை விரைவில் அமைக்கப்படும், என ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், சில ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து, காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, முதலில் அம்மன் தரிசனம் செய்தார். பின், அப்பகுதியில், சுகாதார சீர்கேட்டிற்கு உள்ளான இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மாங்காடு காமாட்சியம்மன், வைகுண்ட பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், கழிவு நீர் தேங்காத வகையில் மேம்படுத்தும் படி, பக்தர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவு படி, கழிவு நீர் தேங்காத வகையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, போதிய நிதி ஆதாரம் இல்லாததால் 2018 - 19ல் அப்பணிகளை செய்து முடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் இப்பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போதைய சாத்திய கூறுகள் ஆராய்ந்து, அதன் அடிப்படையில் வரைபடம் தயார் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பஸ் நிறுத்தம், பயணியர் நிழற்குடை விரைவில் அமைக்கப்படும். கோவிலை முழுமையாக பராமரித்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, தொகுதி எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.