தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எட்டியானூரிலுள்ள புள்ள முனியப்பன் கோவில் வருடாந்திர விழா நேற்று நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், பக்தர்களுக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, புள்ள முனியப்பனுக்கு, முப்பூஜை அலங்கார சேவைகள் மற்றும் மகா அபிஷேக தீபாரதனை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி, சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.