பதிவு செய்த நாள்
11
ஆக
2021
08:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவத்தின் தங்கத் தேரோட்டம் கோயில் வளாகத்திற்குள் நடந்தது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் திருத்தேர் இழுக்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கோயில் வளாகத்திற்குள் தங்கத் தேரோட்டம் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க, காலை 5:30 மணிக்கு திருத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு ராஜா பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். பின்னர் 6:20 மணிக்கு தங்கத்தேர் இழுக்கும் வைபவம் துவங்கியது. யானை முன் செல்ல, பட்டர்கள் வேதமந்திரம் முழங்க, கோயில் உட்பிரகாரத்தில் தங்கத்தேர் வலம் வந்து நிலையம் சேர்ந்தது. விழாவில் கலெக்டர் மேகநாத ரெட்டி, தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரத்துரை, உதவி ஆணையர் கணேசன், செயல் அலுவலர் இளங்கோவன், மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.