பதிவு செய்த நாள்
11
ஆக
2021
08:08
கோவில்களில் பழங்கால தன்மையை மீட்டு எடுக்கும் முயற்சியிலும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க, அறநிலையத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், ஹிந்து சமய அறநிலையத்துறை புத்துயிர் பெற்று உள்ளது. அத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர், தினசரி பல கோவில்களில் ஆய்வு நடத்தி வருகிறனர்.சுற்றறிக்கைஅதன் அடிப்படையில் அமைச்சர் உத்தரவு படி, கமிஷனர், துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
* கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வசதிகள் ஏற்படுத்தி, தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
* இடப்பற்றாக்குறை தவிர்ப்பதற்காக, தனியார் இடங்களில் வாகன நிறுத்தும் வசதிக்கு திட்டமிட வேண்டும். வயதானோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, பேட்டரி வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்
* கோவிலின் அழகை பாதிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கடைகளை, அறநிலையத்துறை சட்டப்படி அகற்றி, கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
* பக்தர்கள் நிழல் தருவதற்காக அமைக்கப்பட்ட தகரம் மற்றும், ஆஸ்பெட்டா ஷீட் ஆகியவற்றை படிப்படியாக அகற்றி, முறையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்
* சுவர், தரைகளில், டைல்ஸ், கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டு, சிற்பங்கள், கல்வெட்டுக்கள் மூடப்பட்டுள்ளன. அந்தந்த கோவிலின் கட்டட கலைக்கு ஏற்ப, தொல்பொருள் நிபுணர் வழிகாட்டுதலுடன் சீரமைக்க வேண்டும்
* கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் வரிசையில், ஸ்டீல் வழித்தட வேலிகளை அகற்றி, ஆகமத்தை சித்தரிக்கும் வடிவமைப்புடன் கூடிய, பித்தளை வழித்தடங்கள் அமைக்க வேண்டும். அதை முறையாக பராமரிக்க வேண்டும்
சீரமைப்பு பணி
*சீரமைப்பு பணியின் போது, சுவர் சிற்பங்கள், வர்ணம், சிமென்ட் பூசப்பட்டு, அதன் அழகு சிதைக்கப்பட்டுள்ளது. தொழில்பொருள் வல்லுனர்கள் உதவியுடன், அதன் பழமை தன்மையை மீட்க வேண்டும்
* நந்தவனங்களை பசுமைப்படுத்தி, நீர்பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். மா, தென்னை, வாழை தோப்புகளை உயிர்ப்பிக்க வேண்டும்
* தினமும் கோவில்கள் சுத்தப்படுத்துவதோடு, மாதத்திற்கு ஒரு முறை, மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும். இதை கண்காணிக்க, மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும்
* கோவில்களில் போதிய வெளிச்சம் வர வகை செய்ய வேண்டும். நன்கொடையாளர்களின் பெயர் பலகை, பணிகள் வரன்முறைப்படுத்த வேண்டும்
* பராமரிப்பின்றி கோவில் தேர்கள் சிதிலமடைந்துள்ளன. அவ்வப்போது, தேர்களை சீரமைக்க வசதி செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி தேர்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்
* கோவில்களில் இரும்பு கதவுக்கு பதில், மரக் கதவுகளை பயன்படுத்த வேண்டும். கோவில்களில் உள்ள, ஸ்டிக்கர்,பேனர்கள் போன்ற ஆடம்பர பொருட்கள் முழுதும் அகற்றப்பட வேண்டும்
* கோவில்களில் கரப்பான் உள்ளிட்ட பூச்சிகளை அகற்றி, சன்னிதிகளில் கடுக்காய் பயன்படுத்தி, பாரம்பரிய பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை செயல்படுத்த வேண்டும்.இந்த வழிமுறைகளை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியுடன், மாஸ்டர்பிளான் தயாரிக்க வேண்டும். இப்பணிக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர்-