பதிவு செய்த நாள்
12
ஆக
2021
01:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை இருந்தும், சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும், நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூரம் நடக்கிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. ஆண்டுதோறும், ஆடிப்பூரம் தினத்தன்று சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து அலகுகள் குத்தி, காவடிகள் எடுத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணி நகருக்கு வந்தனர். பின், ஆண், பெண் பக்தர்கள் வாய், நாக்கு மற்றும் உடல் முழுவதும் அலகுகள் குத்தியும், காவடிகளுடன் மலையடி வாரத்தில் உள்ள திருக்குளம் பகுதிக்கு சென்றனர். மலைக்கோவிலுக்குச் செல்வதற்கு தடை விதித்ததால், திருக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன், பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.