பதிவு செய்த நாள்
15
ஆக
2021
01:08
சென்னை-கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் முறை, புதிதாக வந்ததல்ல என, ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். கோவில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய, சட்ட உரிமை உள்ளதா என்று கேள்வி எழுப்பிய, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் அளித்துள்ள பதில்:தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம், புதிய திட்டம் இல்லை. இத்திட்டம், 1974ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1996ல் புத்துயிர் பெற்றது. 1974, 1998 ஆண்டுகளில், இத்திட்டத்தை எதிர்த்து, பல வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில், 1992ல் புகார்தாரர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சார்பில் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, கோவில்களில் ஆகம விதிப்படி சமஸ்கிருத வழிபாடு உள்ளது.அதேநேரம், ஒப்பற்ற தமிழ் பக்தி இலக்கியமான தேவாரம், திருவாசகமும் ஏற்கப்பட்டது. தமிழில் அர்ச்சனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு, அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், தமிழில் அர்ச்சனைக்கு எதிரான மனுவும், 1998ல் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை கோவில்களில், தமிழ் மந்திரங்கள் உச்சரிப்பதை தடை செய்ய, எந்த ஆதாரமும் ஆகமத்தில் இல்லை.தமிழில் அர்ச்சனைக்கான முயற்சி, எந்த நடைமுறையையும் மாற்றுவதற்காக இல்லை. அதே நேரம், அத்துமீறலும் இல்லை.பக்தர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் செய்யப்படுகிறது. இந்த முயற்சி, பூஜை முறைகளை மாற்றுவதற்காகவும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.