பதிவு செய்த நாள்
16
ஆக
2021
10:08
திருப்பரங்குன்றம் : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மூலவர் முன்பு நெற்றி, கைகளில் திருநீறு பட்டை, கழுத்தில் ருத்ராட்சத்துடன் ஒரு சிறுமி திருவாசக பாடலை இனிய குரலில், அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ராகத்துடன் நேர்த்தியாக பாடிக்கொண்டிருந்தார்.
அவர் 11 வயது யாழினி. சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கிறார். பெற்றோர் பொன்மேனி சுரேஷ், அன்புமாரி. யாழினி திருவாசக பாடல்களை பாராயணம் செய்து வைத்துள்ளார். மற்ற திருமுறைகளிலுள்ள முக்கியமான பதிகங்களையும் பாராயணம் செய்துள்ளார்.நான்கு வயதில் திருமுறை பாடல்களை விரும்பி படிக்க துவங்கியவர் 7 வயதில் மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த திருவாசகம், தேவாரம் ஒப்புவித்தல் போட்டியில் சிறப்பு முதல் பரிசு பெற்றார். 2017ல் தாம்பிராஸ் அறக்கட்டளை சார்பில் நடந்த திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு, தமிழ் இசைச்சங்கம் நடத்திய தேவாரம் இசைத் தேர்வில் முதல் பரிசு பெற்றார். இதுபோன்று பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். படிப்பிலும் வல்லவர் என நிரூபித்து வருகிறார். ஆன்மிகத்தை அனைத்து ஹிந்துக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.குறிப்பாக சிறுவர், சிறுமியருக்கு ஆன்மிகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை இவரது குறிக்கோள்.
திருமுறை ஆசிரியை: ஏழு வயதில் திருவாவடுதுறை ஆதினத்தில் சமய தீட்சை பெற்றார். கழுத்தில் ருத்ராட்சம், நெற்றி மட்டும் இல்லாமல் உடலில் 16 இடங்களில் திருநீறு இல்லாமல் இவரை காண முடியாது. இதனால் பள்ளியில் பட்டை யாழினி என தோழிகளால் செல்லமாக அழைக்கப்படுகிறார். உடன் படித்தவர்களுக்கு திருமுறை பாடல்களை கற்றுக்கொடுக்கிறார்.
கற்றுத்தர விருப்பம்: யாழினி கூறியதாவது: எனது பெற்றோர் தினமும் அதிகாலையில் வீட்டில் பூஜை அறையில் பாடிய திருமுறை பாடல்கள் ஆரம்பத்தில் துாக்கத்திலிருந்த எனது சிந்தனையை துாண்டியது. பின்பு நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன். திருவாசக பாடல்களின் அர்த்தம் மிகத்தெளிவாக புரிந்ததால் அனைத்து பாடல்களையும் பாராயணம் செய்தேன். திருமுறைகளில் நம் வாழ்க்கையை செம்மைப்படுத்த, மேம்படுத்த புகழ்பெற, நோய்கள் தீரவும், செல்வச் செழிப்பு ஏற்படவும், கடன்கள் தீர, ஏன் வீடு கட்டுவதற்கான பதிகங்களும் உள்ளன. அவற்றை தினம் படித்து வந்தாலே அனைத்தும் நடக்கும்.சனி, ஞாயிறன்று திருவாசக பாடல்களை அர்த்தம் புரிந்து கற்க விரும்புபவர்களுக்கு கற்றுத்தர ஆர்வமாக உள்ளேன் என்றார். இவரை பாராட்ட 63834 09748.