பதிவு செய்த நாள்
21
ஆக
2021
08:08
கேரளாவின் பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவுபடுத்தும் வகையில், விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கமாதம் என்னும் ஆவணியே மலையாளத்தின் முதல் மாதம். இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரம் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் ஓணம் நடந்ததை அறியமுடிகிறது. விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வர்.
ஓணம் பண்டிகையில் மிகவும் பிரசித்தி பெற்றது பூக்கோலம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரள மக்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில், வாசலில் பூக்கோலம் வரைகின்றனர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதும் இதன் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப் பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அளவில் மிகச் சிறிய இது சிவனுக்கு உரியது. லட்சுமி கடாட்சத்திற்காகவும் பூக்கோலம் இடுவதுண்டு. கேரளாவின் பண்பாட்டுச் சின்னமாக பூக்கோலம் திகழ்கிறது.