பதிவு செய்த நாள்
25
ஆக
2021
09:08
சென்னை : மயிலாப்பூரில் உள்ளது ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த கோவில் அரசுடைமை ஆக்கப்பட்டதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை சமீபத்தில் அறிவித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்தும், அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து, கோவில் தரப்பில் வழக்கு நடத்திய வழக்கறிஞர் விக்ரம் கூறியதாவது:
டி.ரங்காச்சாரி, ஐ.பி.அனந்தகுமாரி, கும்மிடி சுதாகரன், நாதெள்ள நாராயண குப்தா ஆகியோர் ஆதிகேசவ பெருமாள் கோவில் அறங்காவலர்களாக இருந்தனர். இவர்களில் ரங்காச்சாரி 2012லும், நாதெள்ள நாராயண குப்தா 2013லும் இறந்து விட்டனர். அனந்தகுமாரியும், கும்மிடி சுதாகரனும் 2021ல் ராஜினாமா செய்து விட்டனர். இந்த விபரங்கள், அவ்வப்போது அறநிலையத் துறைக்கு கோவில் நிர்வாகத்தின் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டன. இருந்தும் அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, கோவிலை அரசுடைமை ஆக்குவதாக அரசாணை வெளியிட்டனர்.கோவில் நிலம், சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அதோடு, ராஜினாமா செய்தவர்கள், இறந்து விட்ட அறங்காவலர்கள், தற்போதும் பொறுப்பில் இருப்பதாக நினைத்து, அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறிஉள்ளனர்.
இதை முன் வைத்து, மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, நீதிமன்றத்தில் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், அரசு தரப்பை கடிந்து கொண்டதால், கோவில் அரசுடைமை ஆக்கப்பட்டதாக போடப்பட்ட அரசாணையை திரும்ப பெற்று கொள்வதாக, அரசு தரப்பில் தகவல் தெரிவித்தனர். அதை பதிவு செய்த நீதிபதி சுந்தர், பின்னர் வழக்கிலிருந்து விலகினார். வழக்கை வேறு நீதிபதிக்கு, தலைமை நீதிபதி மாற்றி விடுவார். புதிய நீதிபதி இரு தரப்பையும் விசாரித்து இறுதி உத்தரவிடுவார். அரசு போட்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டதால், கோவில் நிர்வாகம் கேட்ட பரிகாரம் கிடைத்து விட்டது என்றும் சுந்தர் கூறினார். இதனால், வழக்கு வேறொரு நீதிபதி விசாரணைக்கு செல்கிறது. இருந்தபோதும், அரசு தான் போட்ட உத்தரவை திரும்ப பெற்றதால், கோவில் நிர்வாகம் தொடர்ந்து பழையபடியே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகம் சரியாகநடத்தப்படவில்லை: ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றை, தனியார் அனுபவித்து வருகின்றனர். கோவில் நிர்வாகத்தை சரியாக நடத்தவில்லை. பொதுமக்கள், சேவார்த்திகள் என, பல தரப்பில் இருந்தும் புகார்கள் குவிந்தன. அதனால், கடந்த ஆட்சியின் போது கோவிலை அரசுடைமையாக்க முடிவு எடுக்கப்பட்டது.வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியிடம், அரசு தரப்பு வாதங்கள் முன் வைக்கப்படும். அவர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, நல்ல முடிவை அறிவிப்பார். - ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி - நமது நிருபர் -