பதிவு செய்த நாள்
25
ஆக
2021
03:08
சூலூர்: கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்," என, கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவில் பூஜாரிகள் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாக குழு கூடடம், சூலூர் அடுத்த அரசூரில் நடந்தது. மாநிலத்தலைவர் வாசு தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: கோவில் பூஜாரிகளுக்கு, கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியதிற்கும், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்த, தமிழக முதல்வருக்கு, சங்கத்தின் சார்பில் நன்றி. தமிழ் அர்ச்சனை நூலை, கிராமப்புற கோவில் பூஜாரிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
கிராமக்கோவில் பூஜாரிகளின் ஓய்வூதியத்தை, ரூ. 4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரிகளின் எண்ணிக்கையை, 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு மாத ஊதியம் வழங்கவேண்டும். அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். கோவில் பூஜாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்தை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கோவில்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த பூஜாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் சுந்தரம், துணைத்தலைவர் கணேசன், செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் நரேஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.