கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வாசலில் அரிசிமாவினால் கோலமிடுங்கள். வாசல் முதல் பூஜையறை வரை கண்ணனின் பாதத்தை வரையுங்கள். இதன் மூலம் கடவுளான கண்ணன் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். சிலர் ரங்கோலி, மலர் அலங்காரம், பூக்கோலம் இடுவதுண்டு. பின்னர் மாகலட்சுமியின் அம்சமான பசுவுக்கு பழம், கீரை அளிக்க வேண்டும். கண்ணனுக்கு பிரியமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவலை பிரசாதாமாக படைக்க வேண்டும். ‘ஓம் நமோ பகவதே வாசு தேவாய’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து மலர்களை துாவி தீபாராதனை காட்டுங்கள். பாகவதத்தில் கண்ணன் வரலாறை விவரிக்கும் ‘ தசம ஸ்கந்தம்’ என்னும் பகுதியை ஒருவர் படிக்க, மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் புத்திரதோஷம் விலகுவதோடு அழகும், அறிவும் மிக்க நல்ல குழந்தைகள் பிறப்பர்.