பதிவு செய்த நாள்
30
ஆக
2021
10:08
கண்ணன், கந்தன் இருவருமே தெய்வீகக் குழந்தைகள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது கொண்டாட்டத்துக்குக்கு பஞ்சமில்லை. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இந்த இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. பகவத்கீதையை அருளிய பரந்தாமனை கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்கின்றன புராணங்கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.
ஆடும் மயிலில் முருகன் அசைந்து வருகிறான் என்றால், கண்ணன் மயில் பீலியைத் தலையில் அணிந்த வண்ணம் ஆடி வருகிறான். கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள்! அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்! குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்க காலத்தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் குழலன், கேட்டான் என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.
கண்ணன் காதல் மன்னன். கந்தனும் தினைப்புனம் சென்று, குறவர் குடிசை நுழைந்து வள்ளி நாயகியாரிடம் புரிந்த லீலைகளைக் கந்தபுராணம் விவரிக்கிறது. வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி! எனப் பாடி மகிழ்கிறாள். தர்மத்தை நிலைநாட்ட, தீயவர்களை அழிக்க கண்ணபெருமான் போர்க்களம் கண்டார். கந்தபெருமானும் சூராதி அவுணர்களை அழித்து தேவர் உலகை வாழச் செய்தார். கீதையில் கிருஷ்ண பகவானே சேனைத் தலைவர்களிலே நான் குகப் பெருமானாக விளங்குகிறேன் என்று கூறி மகிழ்கிறார்.
வள்ளி- தெய்வானை தேவியர் இருமருங்கும் விளங்க முருகன் காட்சி தருவது போலவே பாமா, ருக்மிணி தேவியருடன் பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார். பாம்புத் தலைமேலே நடம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்! எனக் கண்ணனைப் போற்றும் பாரதியார், வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் என்று முருகனைப் பாடுகிறார். ஆதிசங்கரரோ... சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் இரண்டும் பாடி கந்தன், கண்ணன் இருவரையும் வணங்குகிறார்.
மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேண்டும் என வேலனிடம் வேண்டுகோள் வைக்கும் அருணகிரிநாதர், எந்தை வருக! ரகுநாயக வருக! மைந்த வருக! என கண்ணனுக்கினிய கறுப்பு நிறக் குழந்தை கண்ணனையும் காதலித்து அழைக்கிறார்.