பதிவு செய்த நாள்
31
ஆக
2021
04:08
சென்னை : கிருஷ்ண ஜெயந்தி விழா, சென்னை மற்றும் புறநகரில் உள்ள சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாள். நாடு முழுதும் இந்நாள், ஹிந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.கிருஷ்ண ஜெயந்தி விழா, நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், தமிழகத்தில் நேற்று கோகுலாஷ்டமி கொண்டாடப்பட்டது. வடமாநிலத்தவர்கள் ஜன்மாஷ்டமியாக கொண்டாடினர். வைணவர்கள் ஸ்ரீ ஜெயந்தியாக கோகுலாஷ்டமியை கொண்டாடுவர்.கிருஷ்ண ஜெயந்தியான நேற்று, சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று கிருஷ்ணருக்கு யாகம் வளர்த்து, அலங்காரம், சந்தியா ஆரத்தி நடந்தது. பின், தரிசன ஆரத்தி, பஜன், 1,008 நைவேத்தியம். அபிஷேகம், மஹா ஆரத்தி நடந்தது.
விழா, ஆன்லைன் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.தேனாம்பேட்டை கிருஷ்ணர் கோவில் தேவஸ்தானத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதில், உற்சவர் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சென்னையில் வைணவ சம்பிரதாயம் கடைப்பிடிக்காத கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.சென்னை நகரில் ஏராளமான வீடுகளில், வீதி முதல் பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர்.மாலை, சீடை, அவல், நாவல் உள்ளிட்ட கனி வகைகள், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, வெண்ணை, பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபாடு செய்து, அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி மகிழ்ந்தனர்.வைணவர்கள் இன்று ஸ்ரீஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.