பதிவு செய்த நாள்
02
செப்
2021
10:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: மனிதனின் வாழ்க்கையில் காலையில் கடவுளின் சிந்தனையுடன் எழுவதும், வீட்டில் உள்ள தெய்வங்கள், குல தெய்வத்தையும் வணங்குவதும் நம் ஒவ்வொருவரின் இயல்பு.
இதனையும் தாண்டி தங்களது அன்றாட பணிகளை துவக்கும் போது நகரில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது கூடுதல் சிறப்பு. அவ்வாறு தினமும் நாம் செயல்படும்போது நம்முடைய வேண்டுதல் நிறைவேறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் மட்டுமின்றி வைத்தியநாத சுவாமி, பெரிய மாரியம்மன், பழனி ஆண்டவர், சீனிவாசப்பெருமாள், பட்டத்தரசி அம்மன் என பல கோயில்கள் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் ஆண்டாள் கோயிலின் உடன் இணைந்த கிருஷ்ணர் கோயில் மிகவும் சிறப்புடையது. கீழ ரத வீதியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் அமைந்துள்ள இக்கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோயிலில் சத்யபாமா, ருக்மணியுடன் வெண்ணையை கையில் ஏந்தி கிருஷ்ணன் காட்சியளிக்கிறார். வைகானச ஆகம முறைப்படி தினமும் காலை 10 மணி, மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
மிகவும் பரந்து விரிந்துள்ள இக்கோயிலின் முன்பு பழமை வாய்ந்த குளம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ள நிலையில், மகாமண்டபத்தில் நம்மாழ்வார், ராமானுஜர், திருமங்கையாழ்வார், கூரத்தாழ்வார், விஷ்வக்சேனர், துவாரபாலகர்கள் உள்ளனர். கொடிமர மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம். கருடன் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் மூலவர் சன்னதி பின்புறம் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். மாதம்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினம் வெண்ணையும், கல்கண்டு நைவேத்யம் செய்து பிரார்த்தித்தால் தொழில் விருத்தி, திருமணம் கைகூடுதல், குழந்தை பாக்கியம் பெறுதல் உட்பட பல வேண்டுதல்கள் நிறைவேறுகிறது. ஆண்டாள் கோயிலுடன் இணைந்துள்ள இக்கோயிலில் நந்தவனம் அமைத்தல், குளத்தை சீரமைப்பது, மரக்கன்றுகள் நடுவது போன்ற பணிகளை கோயில் நிர்வாகம் தற்போது செய்து வருகிறது.