பதிவு செய்த நாள்
03
செப்
2021
04:09
கருமத்தம்பட்டி: விநாயகர் சதுர்த்தி விழாவை, கொண்டாட தடை விதித்த, தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, முருகப்பெருமானிடம் முறையிட்டு, ஹிந்து முன்னணியினர் கருமத்தம்பட்டியில் போராட்டம் நடத்தினர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, விநாயகர் சிலைகள் வைத்து, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டி, கடவுளிடம் முறையிடும் போராட்டம் நேற்று அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டன. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் முருகப்பெருமானிடம், மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில்,நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு முறையிட்டனர். அதன்பின் கோவில் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், வாழைத்தோட்டம் அய்யன் கோவில் முன்பும் போராட்டம் நடத்தப்பட்டன.