திருச்செந்துார் ஆவணித்திருவிழா சுவாமி பச்சை சாத்தி உலா வந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2021 03:09
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா 8ம் நாளான நேற்று சுவாமி சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் உலா வந்தார்.துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா ஆக., 27 கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவாமல் பக்தர்கள் பங்கேற்காமல் விழா நடக்கிறது. 8ம் திருவிழாவான நேற்று அதிகாலை 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.காலை 6:00 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி -தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலுக்குள் உலா வந்து, உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதிக்கு சென்றார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:05 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் பச்சை நிற பட்டாடை உடுத்தி, மரிக்கொழுந்து, பச்சை நிற மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தார்.