பதிவு செய்த நாள்
05
செப்
2021
07:09
மேட்டுப்பாளையம்: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், விழா கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது," என, கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, டி.எஸ்.பி. ஜெய்சிங், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், தவமணி, குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், தலைமையிட துணை தாசில்தார் ஜெயக்குமார் உட்பட அரசு அதிகாரிகளும், இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உட்பட இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனிநபர்கள் தங்கள் இல்லங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை, கரைக்க முடியவில்லை எனில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களின் முன்பு அதை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளை தனிநபர்கள் கொண்டு சென்று, நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட உள்ளது. ஆனால் அமைப்புகளின் சார்பாக, சிலைகளை எடுத்துச் சென்று, நீரில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில், சமூக இடைவெளியில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை, பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், விழா கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு ஆர்.டி.ஒ. பேசினார். இந்து முன்னணி நிர்வாகிகள் பேசுகையில், தனி நபர்கள் தங்களது இல்லங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளித்து உள்ளீர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுப்பாடுகள் தேவை தான். ஆனால் சிலை வைக்கக்கூடாது என தடை போடுவது நியாயம் இல்லை. இது மதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். நான்கு பேர் பொது இடங்களில், அரசு அறிவித்த சில கட்டுப்பாடுகளுடன், சிலை வைக்கவும், அரசு சொல்லும் வழித்தடங்கள், வழியாக சென்று ஆற்றில் சிலைகளை கரைக்க அனுமதி வழங்க வேண்டும், என இந்து அமைப்பினர் பேசினர்.